தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடக்கம்


தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலுக்கு இடையே 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கற்பித்தல் பணி நடக்கிறது.


கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது முதல் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. சிறு குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு 2 ஆண்டுகளாக மழலையர் பள்ளிகளை திறக்க முன்வரவில்லை.


இந்தநிலையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து கட்டுக்குள் இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.


கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மழலையர் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.


அதனை தொடர்ந்து நாளை மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் மழலையர் வகுப்புகள் மட்டும் நடைபெறாமல் இருந்து வந்தது.


2 ஆண்டுகளுக்கு பிறகு நாளை பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கூட வாசனையே தெரியாமல் 2 வருடங்களாக வீடுகளிலேயே முடங்கி, ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்த குழந்தைகள் நாளை முதன்முதலாக நேரடி வகுப்புகளுக்கு செல்கிறார்கள்.


ஆசிரியர்களை நேரில் பார்க்கும் சூழ்நிலையும், அவர்களின் அன்பும் பரிவும் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பும் மீண்டும் உருவாகி உள்ளதை எண்ணி ஆசிரியர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-


எங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளை திறந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்துவோம்.


குழந்தைகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளுக்கு இதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதால் கற்றல் பணி எளிதாக இருக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post