கிரெடிட் கார்டு தகவல்களை ஏமாற்றி வாங்கியும், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வதாக நடித்தும், எஸ்.எம்.எஸ்., மூலம் லிங்க் அனுப்பியும் நடந்த பண மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.பொதுமக்கள் உஷாராக இருக்க, இதோ அவற்றில் சில...

* கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராயர் நகரை சேர்ந்தவர் சுப்பையா, 71. வணிகவரித்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிப்.,19ம் தேதி ஆவாரம்பாளையம் ரோடு புது சித்தாபுதூர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் 9,500 ரூபாய் எடுத்தார். அப்போது அங்கு வந்த டிப்டாப் நபர் ஒருவர், தான் கணபதி கிளை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.சுப்பையாவிடம் வந்து பேச்சுக் கொடுத்த அவர், பணம் எடுக்க உதவுவதாக கூறி ஏ.டி.எம்., கார்டையும், ரகசிய எண்ணையும் வாங்கிக்கொண்டார்.
முதல் முறை 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை 10 ஆயிரத்து 500 ரூபாயும் எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகு கார்டை திருப்பிக் கொடுத்த அந்நபர், வேலை இருப்பதாக கூறி சென்று விட்டார். மீண்டும் சுப்பையா, தானே பணம் எடுக்க முயற்சித்தார்.பல முறை முயன்றும் அவருக்கு பணம் வரவில்லை. இது பற்றி வங்கியில் புகார் தெரிவிப்பதற்காக மார்ச் 8ல் நேரில் சென்றார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.வங்கியில் பணம் எடுக்க அவருக்கு உதவி செய்த நபர், போலியான ஏ.டி.எம்., கார்டை சுப்பையாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ஒரிஜினல் ஏ.டி.எம்., கார்டை கொண்டு சென்றுவிட்டது பின்னர் தெரியவந்தது.சுப்பையா, கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். சிசிடிவி காட்சிப்பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

 

கிரெடிட் கார்டு பணம் 'அபேஸ்'
* கோவை ராம் நகர் காளப்பன் வீதியை சேர்ந்தவர் சம்பத் குமார், 29. கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மொபைல் போனுக்கு ஜன.,3ம் தேதி ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'எஸ்.பி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு நிறுவன ஊழியர்' என்றும், 'கிரெடிட் கார்டு சம்பந்தமான தகவல்களை தெரிவிக்குமாறும்' கேட்டுக் கொண்டார். சம்பத்குமார் தனது கிரெடிட் கார்டு விபரங்களை தெரிவித்தார். அடுத்த சில வினாடிகளில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மாயமானது. புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பாதீர்!
* கோவை பீளமேடு ஜெயின்ஸ் கேம்ரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆன்டனி ராஜேஷ். ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கு ஜன.,5ம் தேதி மொபைல் போனில் ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், உடனடியாக வங்கி கணக்கில் பான் கார்டு இணைக்க வேண்டும் என்றும், தவறினால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விடும் என்றும் இருந்தது. அதை நம்பிய ஆன்டனி ராஜேஷ், மொபைல் போனில் இருந்த 'லிங்க்'கை கிளிக் செய்தார்.
பான் கார்டு எண், ஆன்லைன் வங்கி கணக்கின் உபயோகிப்பாளர் பெயர், பாஸ்வேர்டு ஆகிய விவரங்களை உள்ளீடு செய்தார்.அதை செய்தவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. அப்போது தான், சைபர் மோசடி கும்பலின் வலையில் தான் சிக்கி விட்டதை, ஆன்டனி ராஜேஷ் உணர்ந்தார்.அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். மோசடிகள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தண்டபாணி விசாரிக்கிறார்.
என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது?
சைபர் கிரைம் எனப்படும் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. படித்தவர்கள் கூட தப்பிக்க முடிவதில்லை. தப்பிக்க வேண்டுமெனில், முன்யோசனையுடன் செயல்படுவது முக்கியம். இணையத்தில் வரும் எந்த ஒரு லிங்க்கையும் 'கிளிக்' செய்யக்கூடாது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி, ஆதார், பான் கார்டு விவரங்களை தரக்கூடாது.
ஒரு வேளை விவரங்களை கொடுத்து பணம் பறிபோய் விட்டால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்தால், இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க முடியும்.

Post a Comment

Previous Post Next Post